அனைத்து ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்       සියලූ යදම් බිද නැගෙමූ       DEMOLISH ALL OPPRESSION
 
பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் இன்றைய பாராளுமன்ற உரை:
Category: NEWS, Posted on: 5/19/2022 12:00:00 AM

 

யுத்தத்திலே தமது உயிரைப் பலிகொடுத்த தமிழ் மக்களுடைய நினைவேந்தல் நேற்று முள்ளிவாய்க்காலிலே மிகவும் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது. அங்கு மாத்திரமல்ல வடகிழக்கின் ஏனைய பகுதிகளிலும் அனுட்டிக்கப்பட்டிருக்கின்றது. அந்த மக்களுடைய நினைவை விசேசமாக இம்முறை காலிமுகத்திடலிலே நினைவஞ்சலி நிகழ்த்தப்பட்டிருப்பது ஒரு நல்ல ஆரம்பமாக, ஒரு நல்ல அறிகுறியாக, அந்த இளைஞர்கள் எவ்வளவு தூரம் மனமாற்றமடைந்து தங்களுடைய அஞ்சலிகளை செலுத்தியிருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கின்றபோது இந்த நாட்டுக்கு இது ஒரு நல்ல ஆரம்பமாகவே பாரக்கின்றேன்.

கடந்த காலங்களில் வடகிழக்குக்கு வெளியே இது யுத்த வெற்றி தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு தொடர்ந்து கொண்டாட்டமாக கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது. இம்முறை இந்த செயற்பாடானது நிச்சயமாக தென்னிலங்கையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசியல் கட்சிகளுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது. அவர்கள் அந்த இளைஞர்களுடைய சிந்தனையை ஏற்றுக்கொண்டு இந்த நாட்டிலே ஒரு சரியான இன ஒற்றுமையைக் கொண்டுவருவதற்கான முயற்சியை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை ஒன்று சாடையாக ஆரம்பிக்கத் துவங்கியிருக்கின்றது.

தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமாக எடுத்துக் கொண்டால், முக்கியமாக பொருளாதாரப் பிரச்சினையால் ஏற்பட்ட இந்தப் பிரச்சினைகளுக்குப் பிறகு இப்போது ஆட்சிமுறைமையிலே ஒரு மாற்றம் கொண்டுவருவது சம்பந்தமாக பேசப்படுவதை நாங்கள் அறியக்கூடியதாகவிருக்கின்றது. ஆட்சிமுறை நிச்சயமாக வேண்டும். ஆட்சிமுறை என்று சொல்கின்றபோது ஜனாதிபதி முறைமையை மாற்றுவது மாத்திரமல்ல. நிச்சயமாக தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கும் ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கவேண்டும். தீர்வை முன்வைப்பதன்மூலம், அதாவது ஒரு சரியான சமஸ்டி முறையிலான ஒரு ஆட்சிமுறையை முன்வைப்பதன் மூலம் தமிழ் மக்களும் தாங்களும் இந்த நாட்டுப் பிரஜைகள்தான். அவர்களுக்கும் இந்த நாட்டிலே ஒரு சரியான பங்கிருக்கின்றது என்று சொல்லி இந்தப் பொருளாதார வளர்ச்சியிலே அவர்களும் தங்களுடைய முழுமையான பங்களிப்பைச் செய்வார்கள்.

இங்கு வாழுகின்ற தமிழ் மக்கள் மாத்திரமல்ல, இன்று இந்த டொலர் தட்டுப்பாட்டை அல்லது துப்புரவாகவே அற்றுப் போகின்ற ஒரு வங்குரோத்து நிலையிலே புலம்பெயர் மக்களிடமிருந்து நிதிகளை எப்படிப் பெறுவது என்று இங்கு பேசப்படுகின்றவேளையிலே – இந்த சபையிலேகூட பேசப்படுகின்றது. முக்கியமாக புலம்பெயர் தமிழர்கள் மிகப் பெருவாரியாக, ஒரு அளவுக்கு வசதியாக வாழுகின்ற அவர்கள் தங்களால் இயன்றளவுக்கு இங்கு வந்து முதலீடுகளைச் செய்வதற்குத் தயாராக இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு, அவர்களுடைய முதலீடுகளுக்கோ அல்லது அவர்களுடைய உயிர்களுக்கோ உத்தரவாதமில்லை என்ற ஒரு பயம் இருந்துகொண்டிருக்கின்றது.

கடந்த காலங்களிலேகூட யுத்தம் முடிந்தபின்பு அவர்கள் இங்கு வருவதற்கு தயாராக இருந்தபோதும்கூட, அவர்கள் வந்தபோதும்கூட அவர்கள் இங்கு தங்களுடைய முதலீடுகளை இடமுடியாத அளவு தடைகள் போடப்பட்டு, அவர்களெல்லாம் திரும்பிச்சென்று நம்பிக்கை இழந்து இருக்கின்றார்கள். இதையெல்லாம் கட்டியெழுப்புவதற்கு நிச்சயமாக அரசு மாத்திரமல்ல இங்கே இருக்கக்கூடிய கட்சிகள் அனைத்தும் ஒன்றாக ஒரு நியாயமான தீர்வைக் கொண்டுவந்து அதை மேற்கொள்ள வேண்டும்.

அனைவருக்குமே தெரியும் சுதந்திரம் அடைந்தநாள் தொடக்கம் இந்த நாட்டிலே மாறிமாறி ஏதோ ஒரு விதத்திலே அழிவு வந்துகொண்டுதான் இருந்திருக்கின்றது. கடைசியாக இந்த ஒன்பதாம் திகதி இது ஒரு அதிகாரப்போட்டி, பதவிப்போட்டி, இதன்காரணமாக ஒரு மிகப்பெரிய அழிவையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம். முக்கியமாகப் பார்த்தால் எங்களுடைய பாராளுமன்றத்திலே மிக ஒரு நல்ல அமைதியான அனைவரோடும் அன்பாகப் பழகக்கூடிய பொலநறுவை பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரள அவர்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். அவருக்கு எனது கட்சியின் சார்பிலே நான் அஞ்சலியை செலுத்திக்கொள்ள விரும்புகின்றேன். இப்படியான கொலைகள் நிச்சயமாக இந்த நாட்டை முன்னேற்றப் பாதையிலே கொண்டுசெல்ல முடியாது. இன்றிருக்கக்கூடிய அதாவது இவ்வளவு வீழ்ச்சி நேரத்திலும்கூட இதைக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்ற நேரத்திலும்கூட இப்படியான கலவரங்கள் நிச்சயமாக ஒரு நல்ல செய்தியை வெளிநாடுகளுக்குக் கொடுக்க முடியாது. கொடுக்கப்போவதுமில்லை.

வெளிநாடுகளைப் பொறுத்தமட்டில் இவைகளைப் பார்க்கின்றபோது அவர்களும் ஒரு மிகப்பெரிய தயக்கங் காட்டுவார்கள். ஏனென்றால் இந்தநாடு இன்னும் திருந்தவில்லை என்ற ஒரு அபிப்பிராயத்தைத்தான் கொடுக்கப்போகின்றது. இன்று ஏதோ எப்படியோ ஆட்சி மாற்றமொன்று கொண்டுவரப்பட வேண்டுமென்று முயற்சிக்கப்பட்டபோது, பலரும் மறுத்தபோது கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அந்தப் பதவியை எடுத்திருக்கின்றார். அவர் ஒரு பொருளாதார கட்டமைப்பு, மறுசீரமைப்பு பற்றி அறிந்தவர் இவைகளிலே வல்லவர் என்ற அபிப்பிராயம், ஆற்றலுடையவர் என்ற அபிப்பிராயம் பொதுவாக பல மக்கள் மத்தியிலே இருக்கின்றது. ஆனால் அவர் ஒரு மந்திரவாதியில்லை. அந்த தொப்பியிலே இருந்து எடுத்து பெற்றோலையும் உணவுப் பொருட்களையும் காஸ் சிலிண்டர்களையும் தருவதற்கு நிச்சயமாக அவர் ஒரு மந்திரவாதியல்ல. இருந்தாலும் என்னைப் பொறுத்தமட்டிலும் அவர் அதைச் செய்யக்கூடியவர். அதாவது பொருளாதார கட்டமைப்பை ஓரளவு சீர்செய்யக்கூடியவர் என்ற நம்பிக்கை மேற்குலக நாடுகளிலே அவர்மேல் இருக்கின்றது. அதன் காரணமாக சில விடயங்களை அவர் செய்யக்கூடியவர் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கின்றது. இருந்தாலும் இந்த நாட்டை சரியான முறையிலே முன்னேற்ற வேண்டுமென்றால் ஒரு தனி நபரிலே நம்பிக்கை வைத்து அதை செய்யமுடியாது. அவர் தனிநபராக அதை செய்து முடிக்க முடியாது. இந்த பாராளுமன்றத்திலே இருக்கக்கூடிய அனைவருமே சரியான முறையிலே செயற்பட வேண்டும். ஒற்றுமையாக செயற்பட வேண்டும். ஆகக்குறைந்தது இந்த நாடு இருக்கின்ற பொருளாதார வங்குரோத்துத் தன்மையை நன்றாக உணர்ந்து அரசியல் செய்வதை விடுத்து ஒரு சரியான முறையிலே கட்டியெழுப்ப வேண்டும். அதேநேரத்தில் கட்டியெழுப்புகின்றபோது தமிழ் தேசிய இனப்பிரச்சினை என்பது மிக நீண்ட காலமான பிரச்சினை. இன்று இருக்கக்கூடிய பொருளாதார பிரச்சினையும் அண்மையிலே வந்ததல்ல. நீண்டகாலமாபக வந்திருந்தாலும் அண்மையிலேதான் இவ்வளவு வங்குரோத்துத் தன்மைக்குப் போயிருக்கின்றது. ஆனால் எங்களுடைய பிரச்சினை நீண்டகாலப் பிரச்சினை அதைத் தீர்ப்பதன்மூலம்தான் இந்த நாட்டிலே ஒரு நிரந்தரமான பொருளாதார கட்டமைப்பை கட்டியமைக்க முடியும். அதன் மூலம்தான் இந்த நாடு சுபீட்சத்தை நோக்கிப் போகமுடியும் என்பது உறுதியான ஒன்று. அதை செய்யவேண்டுமென்று கேட்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம். 19.05.2022
           

Add a Comment
Name:            
Your Comment:           
                         

View Comments (0)


 


 
<August 2022>
SuMoTuWeThFrSa
31123456
78910111213
14151617181920
21222324252627
28293031123
45678910

News Categories
NEWS (25)
ALL

ALL (7689)
More News